UPDATED : ஜூலை 02, 2026 04:59 PM
ADDED : ஜூலை 02, 2026 04:50 PM
தேனி:குறுவை சாகுபடி செய்வதற்கு முன் நெல் விதைகளை பரிசோதனை செய்து கொள்ளுமாறு விதைப்பரிசோதனை அலுவலர் சிவகாமி, வேளாண் அலுவலர் சதிஷ், மகிஷா தேவி வலியுறுத்தி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட குறுவைப்பட்டத்திற்கான நெல் ரகங்களான ஏ.டீ,டி.,36, ஏ.டீ.டி.,37, ஏ.டீ.டி., 45, ஏ.எஸ்.டி., 16, கோ 51, டி.பி.எஸ்., 5 ஆகிய ரகங்களை பகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். தேர்வு செய்யும் முன் விதைகளை பரிசோதனை செய்வது அவசியமாகும். இதில் கோ 51 ரகம் 105 முதல் 110 நாட்களில் விளைச்சல் தரும், குலைநோய், புகையான், பச்சைதத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.
எக்டேருக்கு 6623 கிலோ விளைச்சல் தரும். டீ.பி.எஸ்.,5 அறுவடை நாட்கள் 118,தண்டு துளைப்பான், இலை சுருட்டல் புழு, புகையானுக்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது. சராசரியாக 6300 கிலோ விளைச்சல் தரும்.ஏ.டி.எஸ்., 16 ரகம் அறுவடைக்கு 115 நாட்கள் ஆகும். புகையான், இலையுறை அழுகல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது. இடு பொருள் செலவுகளை குறைக்க விதைகளை விதை மாதிரி பரிசோதனை செய்வது அவசியமாகும். தேனி வேளாண் வணிக வளாக முதல் தளத்தில் செயல்படும் விதை பரிசோதனை மையத்தில் ரூ. 80 செலுத்தி விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைமூலம் விதையின் தரம் அறிந்து நல்ல மகசூல் பெறலாம் என்றனர்.
