/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
20 ஆண்டுகளாக நிரம்பாத ருத்ராயப் பெருமாள் கோயில் கண்மாய் ஆறு கிராமங்களில் குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
/
20 ஆண்டுகளாக நிரம்பாத ருத்ராயப் பெருமாள் கோயில் கண்மாய் ஆறு கிராமங்களில் குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
20 ஆண்டுகளாக நிரம்பாத ருத்ராயப் பெருமாள் கோயில் கண்மாய் ஆறு கிராமங்களில் குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
20 ஆண்டுகளாக நிரம்பாத ருத்ராயப் பெருமாள் கோயில் கண்மாய் ஆறு கிராமங்களில் குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
ADDED : அக் 02, 2025 03:21 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் மறவபட்டி ருத்ராயப் பெருமாள் கோயில் கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் நிரம்பாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1987ல் முதல்வராக இருந்தபோது கண்மாய் அமைப்புக்கான பணிகள் துவக்கி முடிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள தண்ணிப்பாறை, பூசணிக்காய் சுனை ருத்ராயப் பெருமாள் கோயில் நீரோடை மூலம் கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கும். நீர் வரத்து ஓடைகளை 20 ஆண்டு களுக்கும் மேலாக பராமரிப்பு செய்யவில்லை. கண்மாயும் துார்வார வில்லை.
மழை காலங்களில் கண்மாயில் தேங்கும் குறைந்த அளவு நீரும் கூட, சில மாதங்களிலேயே வற்றி விடுகிறது.
விவசாயத்தை சார்ந்துள்ள இப்பகுதியில் நீர் ஆதாரத்திற்கு மாற்று வழியில்லை. இதனால் ஆண்டுதோறும் வேளாண் பணிகளுக்கான சாகுபடி பரப்பு இப்பகுதியில் அதிகளவில் குறைந்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
20 ஆண்டுகள் நிரம்பாத கண்மாய் மகாராஜன், மறவபட்டி: கண்மாயில் 20 ஏக்கர் பரப்பளவில் நீர் தேங்கும். மணற்பாங்கான பகுதி என்பதால் தேங்கும் நீர் சில மாதங்களில் வற்றிவிடும். கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் ஒரு ஆண்டு வரை நிலத்தடி நீர் சுரப்பு கிடைக்கும். இறவை பாசனம் தடையின்றி நடக்கும். 20 ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து சிலர் விவசாயத்தை கைவிட்டு உள்ளனர்.
விவசாயம் பாதிப்பதால் அதனை சார்ந்து உள்ள கால்நடை வளர்ப்புத் தொழிலும் பாதிக்கிறது. மழை குறைந்தாலும் கிடைக்கும் நீரை முறைப்படுத்தி கண்மாயில் தேக்கினால் ஆண்டு தோறும் கண்மாயில் நீரை நிரப்ப முடியும்.
கண்மாய் நீரை மடைகள் மூலம் திறந்து நேரடி பாசனம் செய்ய வசதியும் உள்ளது. தற்போது விவசாயிகள் மடைகளை அடைத்து வைத்துள்ளனர்.
கண்மாயில் நீர் தேங்கி நின்றால் மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, சித்தையகவுண்டன்பட்டி, மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி கிராமங்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். கண்மாயில் தொடர்ந்து நீரை தேக்கி, விவசாய பணிகள் நடைபெற வழிவகை செய்திட வேண்டும்., என்றார்.
பெரியாறு உபரிநீர் தேக்கினால் மறுவாழ்வு செல்லத்துரை, மறவபட்டி: கண்மாய், நீர்வரத்து ஓடைகளை துார்வார விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
மூல வைகை ஆறு, வைகை அணை ஆண்டிபட்டி அருகே இருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்ப கவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் தேக்குவதற்கான திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து கடந்த காலங்களில் முன்னாள் துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கின்றனர். நடவடிக்கைதான் இல்லை. தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே உள்ளது. வளமான மண் இருந்தும் இப்பகுதியில் நீர் ஆதாரம் குறைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கைவிடப்படும் விவசாயம் பாண்டியன், மறவபட்டி: கடந்த 40 ஆண்டுகளில் கண்மாய் 5 முறை மட்டுமே நிரம்பியுள்ளது. தற்போது கண்மாய் முழுவதும் சாலி மரங்கள் வளர்ந்துள்ளன.
நீர்வரத்து ஓடைகளும் புதர் மண்டி கிடக்கிறது. தண்ணி பாறையில் இருந்து கிடைக்கும் நீரை கண்மாயில் முழுமையாக சேர்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயை சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் இறவை பாசனம் உள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டம் சமன் செய்யப்பட்டால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும்.
ஏற்கனவே விவசாயிகள் பலர் தொழிலை கைவிட்டு, மாற்று தொழிலுக்கு சென்றுள்ளனர். இருக்கும் விவசாயத்தை தக்க வைக்கவும், கண்மாய் நிரம்பும்படி நீர் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.