/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
/
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
ADDED : அக் 09, 2025 04:14 AM
கம்பம் : கம்பம் நகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த தலைவர்,துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று ( அக். 9 ) ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. தோல்வி அடைந்தால் தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் ராஜினாமா என்ற வதந்தி பரவியுள்ளது.
கம்பம் நகராட்சி தலைவராக வனிதா, துணை தலைவராக சுனோதா உள்ளனர். இங்குள்ள 33 வார்டுகளில் அ.தி.மு.க. 7 , காங். மு.லீக் தலா ஒன்று, தி.மு.க. 24 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க. 6 , தி.மு.க., 16 கவுன்சிலர்கள் தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தனித்தனியாக மனு கொடுத்திருந்தனர்.
அதற்கான ஒட்டெடுப்பு இன்று காலை நகராட்சியில் நடக்க உள்ளது. இதற்கென நகராட்சி கூட்டரங்கில் 2 ஒட்டுப் பெட்டிகள் வைக்கப்படும். கூட்டத்தில் பங்கேற்கும் கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் இரு ஒட்டுக்கள் பதிவு செய்ய வேண்டும். கலெக்டரின் ஆலோசனைப்படி கூட்டரங்கில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் சுற்றுலா தலங்களுக்கு ஜாலி டூர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தீர்மானம் வெற்றி பெறுமா நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற 5ல் 4 பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்று தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் 5 ல் 4 பங்கு என்பது 27 கவுன்சிலர்களாகும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள தி.மு.க. 16, அ.தி.மு.க., 6 என 22 கவுன்சிலர்களே உள்ளனர்.
தலைவருக்கு ஆதரவாக 6 கவுன்சிலர்கள் உள்ளதாகவும், தலைவர், துணை தலைவர் சேர்த்து 8 பேர் உள்ளனர். 33 கவுன்சிலர்களில் 8 பேர் தவிர, 25 பேர் உள்ளனர். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் என்கின்றனர் அதிகாரிகள்.
ஒட்டுமொத்த ராஜினாமாவா இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால், தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. அவ்வாறு ராஜினாமா செய்தால், கவுன்சில் தப்புமா என்பது கேள்வி எழுந்துள்ளது. கம்பம் நகராட்சியில் என்ன நடக்கப் போகிறது என பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.