ADDED : செப் 03, 2026 06:01 PM
ஆண்டிபட்டி, செப். 4-
அரசு நிர்ணயத்தை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் சம்பளத்திலிருந்து பி.எப். திட்டத்திற்கு பணம் பிடிப்பதை நிறுத்தக் கோரியும் நூறுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் குப்பை சேகரித்து அதனை தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொண்டு சேர்க்கும் பணியில் 102 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக தினமும் ரூ.663 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தினமும் சம்பளமாக ரூ.707 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த சம்பளத்தை பேரூராட்சி நிர்வாகம் உயர்த்தி வழங்கவில்லை. சம்பள உயர்வை உடனே வழங்க வலியுறுத்தியும் தங்கள் சம்பளத்திலிருந்து பி. எப்., திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்த கோரியும் வந்தனர். கோரிக்கையை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் தூய்மை பணியாளர்கள் நேற்று பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., தொழிற்சங்க நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகத்தினர், தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.
