ADDED : அக் 05, 2025 05:13 AM

கம்பம் : வன உயிரின வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் சுருளி அருவி வனப்பகுதியில் பறவைகளை கண்டு ரசிக்க வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வன உயிரின வாரம் அக். 2 முதல் 8 வரை கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்தில் உயிரினங்களின் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடம் பாதுகாப்பது, மனித மோதல்களை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வனத்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
வன உயிரின பாதுகாப்பு நிதி மக்கள் மற்றும் கிராமத்தில் முதலீடு கருப்பொருளாக அறிக்கப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்பை திறம்பட மற்றும் நிலையான முறையில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று ஸ்ரீவி. மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் குமார் யாதவ் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை சுருளி அருவி பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அவர்களுக்கு பைனாகுலர்கள் வழங்கி பல்வேறு பறவைகளை பார்க்கவும், அதன் ஒலி, உடல் அமைப்பு, நிறம் போன்றவைகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்தனர். ஏராளமான பறவைகள், விலங்குகள் கண்டு மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதன் மூலம் பறவைகள் பாதுகாப்பை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும் என வனத்துறையினர் கூறினர்.