‘செக் பவர் போச்சே’ ஒன்றிய ஏ.பி. டி.ஓ.,க்கள் புலம்பல்
‘செக் பவர் போச்சே’ ஒன்றிய ஏ.பி. டி.ஓ.,க்கள் புலம்பல்
UPDATED : நவ 27, 2026 04:02 PM
ADDED : நவ 27, 2026 04:02 PM
கம்பம்: ஊராட்சிகளின் தனி அலுவலர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டதால், ஒன்றியங்களில் செக் பவரும் இல்லாமல் ஏ.பி.டி.ஓ., க்கள் புலம்பி வருகின்றனர்.
கிராம ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, துணை பி.டி.ஓ.,க்கள் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மண்டல அலுவலர்களை, தனி அலுவலர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் மூலம் துணை பி.டி.ஓ.,க்கள் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு தனி அலுவலருக்கும் குறைந்தது 3 ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் ஏ.பி.டி.ஓ., க்களிடம் இருந்த அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு, தனி அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. குறிப்பாக செக் பவர் பறிக்கப்பட்டது.
இதனால் கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தை முழுமையாக வைத்திருந்தது கை விட்டு போய் விட்டது.
ஏ.பி.டி.ஓ.,க்கள் இப்போது என்ன பணி செய்கின்றனர் என விசாரித்தால் ‘‘ அவர்கள் வேலை ஏதுமின்றி உள்ளதாக தகவல் கூறுகின்றனர். குறிப்பாக செக் பவர் பறிக்கப்பட்டது ஏ.பி.டி.ஓ.,க்களை மிகவும் பாதித்து விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் மரக் கன்றுகள் நடவு செய்யும் பணிகளை ஆய்வு செய்வது மட்டுமே அவர்களது பிரதான வேலையாக உள்ளது. தினமும் அலுவலகம் வந்து வெறுமனே உட்கார்ந்து எழுந்து செல்கின்றனர் என்கின்றனர்.
