ADDED : செப் 24, 2026 04:14 PM
தேனி, செப். 25– நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவில் தேனி தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நீதிமன்ற பணியாளர் பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1996ல் போடி மேலசொக்கநாதபுரம் சுப்பிரமணி 4.35 ஏக்கர், பொன்சங்கர் 2.10 ஏக்கர், கிருஷ்ணசாமி 2.17 ஏக்கர் நிலம் வழங்கினர். இழப்பீடாக மொத்தம் ரூ.90 ஆயிரம் வழங்க அரசு நிர்ணயித்திருந்தது. இழப்பீடு கூடுதலாக வழங்க கோரி பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சுப்பிரமணி, பொன்சங்கர், கிருஷ்ணசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சதுர அடி ரூ.7.40 வழங்க 2005ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு அரசு 2011ல் மேல் முறையீடு செய்தனர். ச.அடிக்கு ரூ7.40 வழங்கும் தீர்ப்பை 2020ல் மதுரை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் அரசு முழு தொகையும் வழங்காததால் வழக்கு தொடர்ந்தவர்கள் பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். தேனி தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல பிரிவு அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் அமினாக்கள் விஜயா, அஜய் கிருஷ்ணா தலைமையில் இழப்பீடு கோரியவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். தாசில்தார் உதயராணி பேச்சுவார்த்தை நடத்தி அவகாசம் கோரினர். ஆதிதிராவிடர் நல தாசில்தார் விடுமுறை என்பதால் செப்., 28 ல் கடிதம் பெற்றுக்கொள்ள கூறி அனுப்பினர்.
