/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோல் தொழிற்சாலைகளில் சோலார் சக்தி: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கலாம்
/
தோல் தொழிற்சாலைகளில் சோலார் சக்தி: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கலாம்
தோல் தொழிற்சாலைகளில் சோலார் சக்தி: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கலாம்
தோல் தொழிற்சாலைகளில் சோலார் சக்தி: சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கலாம்
ADDED : அக் 20, 2024 07:02 AM

தேனி,: உலகம் வெப்பம் அடைவதாலும், பனி மலைகள் உருகுவதாலும் கடல் நீர்நிலை அதிகரிப்பதாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயம், ஆரோக்கியம், கட்டமைப்புகள் அனைத்தும் இதனால் பாதிக்கிறது. வெப்பமடைவதற்கு முக்கிய காரணம் கரியமிலவாயு (கார்பன் டைஆக்சைடு). இதனை குறைக்க சோலார் சக்தியின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். தற்போது பல்வேறு தொழிற்சாலைகளும் சோலார் மின் உற்பத்திக்கு மாறி விட்டன.
தோல் தொழிற்சாலைகள், சுடுநீர், சுடு காற்று தேவைப்படும் தொழிற்சாலைகள், ரசாயனங்கள், மசாலாக்கள், பழங்கள், தேநீர் இலை, கடல் சார் பொருட்கள், நுால், துணி, செராமிக், உப்பு போன்றவற்றின் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சோலார் ஆற்றல் இயந்திரங்களை நிறுவி வருகிறது தேனியை சேர்ந்த சன்பெஸ்ட் சோலார் கம்பெனி.
இந்நிறுவன இயக்குனர் டாக்டர் சி.பி.ராஜ்குமார் கூறியதாவது:
உலக தோல் சந்தைக்கு இந்தியாவின் பங்களிப்பு 13 சதவீதம். இத்தொழில் ஆண்டுதோறும் நம் நாட்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை அந்நிய செலவாணியாக ஈட்டித் தருவது மட்டும் இன்றி 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. ஆனால் இந்த வளர்ச்சிக்கு மறுவினையாக காற்றில் கரியமிலவாயு வெளியேற்றம், நீர் மாசு, காற்று மாசு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் விறகு, டீசல் மூலம் இயங்கும் நீராவி அல்லது தெர்மிக் ஆயில் பாயிலர்களை பயன்படுத்தி தொழிற்சாலைக்கு தேவையான சுடு நீரையும், சுடான காற்றையும் உருவாக்குகின்றன. இதற்கு மாற்றாக தோல் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும் ராணிப்பேட்டையில் 4 தொழிற்சாலைகளில் 2 வகை சோலார் ஆற்றல் இயந்திரங்களை நிறுவியுள்ளோம்.
சுடு காற்று உருவாக்கும் இயந்திரம்
இந்த இயந்திரம் தொழிற்சாலைகளின் தகரக் கூரையில் நிறுவப்படுகிறது. இதில் உள்ள தனிச்சிறப்பு சூரிய ஆற்றல் உறிஞ்சும் தகடுகள் 30 முதல் 40 டிகிரியில் இருக்கும் சுற்றுப்புற காற்றை 80 டிகிரி வரை சூடாக்குகிறது. இந்த சூடு தோலை பதப்படுத்தும், காயவைக்கும் இயந்திரங்களுக்கு உதவுகிறது.
ஹை டெம்ப்ரேச்சர் சுடுநீர் தயாரிக்கும் இயந்திரம்
தொழிற்சாலைகளின் தகர கூரையில் நிறுவப்படும் இந்த கண்ணாடியால் ஆன சுடுநீர் தயாரிக்கும் கருவி தண்ணீரை 90 டிகிரி வரை சூடாக்கி தோல் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுடு நீராக வழங்குகிறது. சுடுநீரை வெப்ப நிலை காப்பு கலன்களில் சேமிப்பதால் 24 மணி நேரமும், விறகு பாயிலரின் தேவையை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முடிகிறது.
மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகளுக்கும் இந்த 2 இயந்திரங்களுக்கும் வித்தியாசம் என்ன வென்றால் சோலார் மின்சார தகடுகளை காட்டிலும் இவற்றின் ஆற்றல் அதிகம் என்பதால் சிறிதளவு இடம் போதுமானது. தொழிற்சாலையின் பயனற்ற கூரையை சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் இடமாக மாற்றுவது மட்டும் இன்றி கூரைக்கு கீழிருக்கும் இடத்தின் வெப்பத்தையும் குறைக்கிறது.
இவ்வாறு கூறினார்.
மேலும் அறிய 98948 75500 ல் தொடர்பு கொள்ளலாம்.