ADDED : நவ 25, 2025 02:14 AM
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மண்டல சீசன் தொடக்கத்தில் தொடர்ச்சியாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் எட்டு மணி நேரம் வரை உணவும், தண்ணீரும் கிடைக்காமல் நின்று சிரமப்பட்டனர். பம்பையிலும் காத்திருப்பு நீண்டதால் ஏராளமான பக்தர்கள் பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்து திரும்பினர்.
இதைத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம், ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைத்து உத்தரவிட்டது. 24ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
அதன் பின்னர் இருக்கும் நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பம்பையில் தேவசம் அமைச்சர் வாசவன் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் கூட்டத்தைப் பொறுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் 53 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 70 பேர் ஏற்றப்படுகின்றனர் இதை 85 ஆக மாற்றுவதற்கான முயற்சியும் நடக்கிறது. இதற்காக கடந்த ஆண்டுகளில் 18 படிகளில் பணியாற்றிய போலீசாரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக மலையேறும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
பெருவழி பாதையில் கரிமலையில் பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். இங்கு சறுக்கல் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

