மருத்துவம் படிக்க அனுமதிக்க கோரி மாணவி ஆர்ப்பாட்டம்
மருத்துவம் படிக்க அனுமதிக்க கோரி மாணவி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2026 02:22 AM

தேனி: உத்தமபாளையம் தாலுகா தேவாரத்தை சேர்ந்த மாணவி சசினா 19,விற்கு மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேனி மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிக்க சீட் ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதற்கு எதிராக மேல் முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கேசவராஜா முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாணவி சசினா கூறுகையில், 'நீட்தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேனி மருத்துவக்கல்லுாரியில் சீட் ஒதுக்கீடு செய்தனர்.
தேனியில் பரிசோதனை செய்து 40 சதவீத மாற்றுத்திறன் என சான்றளித்து இருந்தனர். இந்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்து 75 சதவீத மாற்றுத்திறன் உள்ளதால் மருத்துவம் படிக்க முடியாது என தகுதி நீக்கம் செய்தனர்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். நீதிபதி மீண்டும் தேனி மருத்துவக்கல்லுாரியில் அட்மிஷன் வழங்க உத்தரவிட்டார்.
அட்மிஷன் முடிந்த பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய சென்னை வர கூறினர். பரிசோதனை செய்து 75 சதவீத மாற்றுத்திறன் காரணமாக மருத்துவம் படிக்க முடியாது என கூறினர்.
தற்போது அரசு சார்பில் என் வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டை ரத்து செய்து என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
