ADDED : நவ 15, 2025 04:52 AM
போடி: இயற்கை உரமான மண்புழு உற்பத்தி செய்திட உரப்படுக்கைகள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மண்ணின் தன்மை மாறி, விளை பொருட்களின் சுவையும் குறைந்து வருகிறது. இதனை தவிர்க்க 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் சாணம், காய்கறி கழிவுகள், மண் புழுக்களுடன் இயற்கை உரம் தயாரிக்க உரப்படுக்கை வழங்கப்படுகிறது.
12 அடி நீளம், இரண்டரை அடி உயரம் கொண்ட உரப் படுக்கை ஒன்றிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.1500க்கு வழங்கப்படுகிறது. இதோடு உரப்படுக்கை உடன் குச்சிகள் அமைத்து சாணம், மண்புழு உரம் தயாரான பின் 50 சதவீதம் மானியமாக ரூ.1500 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மண்புழு உரம் தயாரிப்பதற்கான உரப் படுக்கை தேவைப்படும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோவுடன் போடி வேளாண் அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

