ADDED : மார் 15, 2026 05:10 AM
கம்பம்: நீண்ட இழுபறிக்கு பின் காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை மின்வாரியம் துவக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடங்கலின்றி மின் சப்ளை, சீரான மின் வினியோகத்திற்கு துணை மின் நிலையங்கள் உதவுகின்றன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன.
சின்னமனூர், கூடலூர், காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க மின்வாரியம் மதிப்பீடுகள் தயார் செய்து அனுமதி வழங்கிய போதும், பல்வேறு காரணங்களால் பணிகள் தடைபட்டு வந்தது.
காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கும் முன்பே அனுமதி வழங்கியும், இடத் தேர்வில் சிக்கல் இருந்ததால் அமைக்க முடியவில்லை.
இந்நிலையில் காமயகவுண்டன்பட்டி சுடுகாட்டை ஒட்டி 2.5 ஏக்கர் நிலத்தில் துணை மின் நிலையம் ரூ.8 கோடியில் அமைக்கும் பணிகளை மின்வாரியம் தற்போது துவக்கி உள்ளது.
இதன் மூலம் கம்பம், வண்ணாத்திபாறை, உத்தமபாளையம் துணை மின் நிலையங்களுக்கு சப்ளை பழு குறையும்.
அந்தந்த ஊர்களில் சப்ளையை மேம்படுத்த முடியும். காமயகவுண்டன்பட்டி துணை மின் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் போது, இதன் கட்டுப்பாட்டில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன் பட்டி கிராமங்கள் இணைக்கப்படும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
