ADDED : செப் 07, 2026 09:32 PM
தேனி, செப்.8–
உப்பார்பட்டி, கோட்டூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் உப்பார்பட்டி, கோட்டூர், ராசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை, இரவில் கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதியினர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். 2 நாட்கள் முன்பு உப்பார்பட்டி ரோட்டில் அமர்ந்து மின்வாரியத்தையும், தமிழக அரசையும் கண்டித்து அப்பகுதியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபற்றி தேனி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டவுடன் விரைவாக சரிசெய்கிறோம். உப்பார்பட்டி, கோட்டூரில் மட்டும் மின்வெட்டு ஏற்படவில்லை. மாநிலம் முழுவதும் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. மத்திய அரசிடம் இருந்து மாதத்திற்கு 250 கோடி யூனிட் முதல் 350 கோடி யூனிட் வரை மின்சாரம் பெறப்படுகிறது. ஆனால் சில நாட்களாக குறைந்ததால் மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படாது,’ என்றார்.
