ADDED : ஏப் 08, 2026 05:53 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் தென்னந்தோப்பு காவலாளி முத்துவேல் 49, கொலையில் கொலையாளி என போலீசார் சந்தேகித்த கருப்பசாமி 37, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் முத்துவேல் 49. இவரது மனைவி சரசு 50.
மகள் மூவரும் பெரியகுளம் வடுகபட்டி ரோடு அட்டைக் கம்பெனி எதிர்புறம், மகாராஜன் குத்தகை தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்தனர். இந் நிலையில் ஏப்.5 காலையில் சரசு தனது மகளுடன் மேல்மங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவருடன், விருதுநகர் பகுதி தோட்டத்தில் வேலை கேட்பதற்கு சென்றனர். ஏப்.5 இரவில் சரசு தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முத்துவேல் உடலில் காயங்களுடன் கொலை செய்து இறந்து கிடந்தார். மனைவி புகாரில், தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் முன்னேற்றம் முத்துவேலிடம் அலைபேசி இல்லை. சம்பவத்தன்று இவரது நண்பர் போடி தாலுகா சிலமலையைச் சேர்ந்த கருப்பசாமி 37, அலைபேசியிலிருந்து முத்துவேல், சரசுடன் பல முறை பேசியுள்ளார். தென்கரை போலீசார் கருப்பசாமி அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
அவரை தேடிச் சென்றார். இதனையறிந்த கருப்பசாமி போடி பெருமாள்கவுண்டன்பட்டியில் நேற்று முன்தினம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் கொலைக்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.-
