/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணிகளில் தொய்வு! அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு
/
கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணிகளில் தொய்வு! அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு
கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணிகளில் தொய்வு! அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு
கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணிகளில் தொய்வு! அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு
ADDED : நவ 28, 2025 07:36 AM
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வருகிறது. மாநில அரசு மூலம் ஊராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் அவ்வப்போது வழங்கும் நிதி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை.
ஊராட்சிகளில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கடை உரிம வரி ஆகியவற்றை கொண்டு செலவுகளை ஈடு செய்து கொள்வர். ஊராட்சிகளில் வரி வசூலில் சிறப்பு கவனம் செலுத்தினாலும் பல ஊராட்சிகளில் 50 சதவீதம் கூட வரி வசூலாவதில்லை. உயர் அதிகாரிகள் வரி வசூலை முடிக்க ஊராட்சி நிர்வாகத்தினை தொடர்ந்து நிர்ப்பந்திக்கின்றனர்.
தொடர் முயற்சி செய்தாலும் வரி வசூலை அந்த ஆண்டில் முடிக்க முடியாமல் பணியாளர்கள் திணறுகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் வரி வசூல் நிலுவையாக ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை இருப்பதால் பணியாளர்களின் சம்பளம், குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஊராட்சிகளில் பொது மக்களின் வரி பங்களிப்பு மிக முக்கியம். வீட்டு வரியாக குறைந்தபட்சம் ரூ.60 முதல் 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வரியாக மாதம் ரூ.60, தொழில் வரியாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரூ.1250, கடை உரிம வரியாக ரூ.200 முதல் 500 வரை நிர்ணயம் உள்ளது. இந்த குறைந்த தொகையை வசூலிக்க ஊராட்சி பணியாளர்கள் பலமுறை சென்றாலும் வசூல் ஆவதில்லை. பல ஊராட்சிகளில் வரி செலுத்துவதை பொதுமக்கள் தட்டிக்கழிக்கின்றனர்.
அரசு மூலம் பல சலுகைகள் மக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதே மனநிலையில் வரி வசூலையும் செலுத்தாமல் தவிர்க்கின்றனர். பொதுமக்கள் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை குறிப்பிட்ட நாளில் செலுத்துவதை அரசு கட்டாயமாக வேண்டும். வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நெருக்கடிகளால் வரி வசூலை ஒவ்வொரு ஆண்டும் முழுமைப்படுத்த முடியும். வரி வசூல் நிலுவை தொடர்வதால் ஊராட்சிகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.

