உயர்வு வரத்து குறைந்ததால் வாழை இலை விலைஒரு கட்டு ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் விற்பனை
உயர்வு வரத்து குறைந்ததால் வாழை இலை விலைஒரு கட்டு ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் விற்பனை
ADDED : ஆக 23, 2026 03:31 PM
தேனி, ஆக. 24–மாவட்டத்தில் வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாழை இலை விலை உயர்ந்து, ஒரு கட்டு ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது. மழையின்றி சாகுபடி பாதிப்பால் இதே நிலை இரு மாதங்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள், பழங்கள் அதிகம் சாகுபடியாகின்றன. மாவட்டத்தில் சின்னமனுார், கம்பம், போடி, உத்தமபாளையம், பெரியகுளம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை சாகுபடி செய்தால் இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்தும் பயன்படும் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கினர். மாவட்டத்தில் ஜி9, கற்பூரவல்லி, நாடு, செவ்வாழை, நேந்திரன், நாலிப்பூவன் ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.மாவட்டத்தில் சில மாதங்களாக போதிய மழை பொழிவு இல்லை. இதனால் வாழை சாகுபடியை தவிர்த்து பிற பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வாழை இலை தேனி மட்டுமின்றி, பிற மாவட்டங்கள், கேரளாவிற்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் வரத்து குறைந்ததால் கடந்த இரு தினங்களாக வாழை இலை விலை உயர்ந்து காணப்பட்டது. தேனியில் ஒரு கட்டு வாழை இலை ரூ. 4ஆயிரத்திற்கும், பிற பகுதிகளில் ரூ.4 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் விற்பனையானது. 5 இலை கொண்ட ஒரு மடி ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்பனையானது. இதனால் சுபவிசேஷங்கள் வைத்திருந்தவர்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை உருவானது. சில ஓட்டல்களில் வாழை இலை தவிர்த்து பாலீதின், காகித இலை பயன்படுத்தினர்.
இருமாதங்களுக்கு தொடர வாய்ப்புபாலகுரு, விவசாயி, தேனி.கடந்த வாரங்களில் இலை கட்டு அதிகபட்சம் ரூ.1400 வரை மட்டும் சென்றது. ஆனால், சுபமுகூர்த்தம், கோயில் விழாக்கள் என இலைகள் அதிகம் தேவைப்பட்டன. ஆனால், மழை இல்லாதது, காற்றால் சேதம் உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அதிகம் செல்லவில்லை. ஓணம், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர்ந்து விழாக்கள் வருவதால் இலையின் தேவை அதிகம் இருக்கும். ஆனால், உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்பதால் இரு மாதங்களுக்கு வாழை இலை விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது. மழை பெய்தால் வாழை இலை உற்பத்தி அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
