ADDED : நவ 25, 2024 04:07 AM
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட 1365 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் அருகில் உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
39 மூடைகளில் 1365 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி, வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்டதாக ஊஞ்சாம்பட்டி கோபாலகிருஷ்ணன் 26, தும்மக்குண்டைச் சேர்ந்த விஷ்வா 19, அல்லிநகரத்தைச் சேர்ந்த அபினேஷ் 25, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அரிசி மூடைகள் உத்தமபாளையம் சிவில் சப்ளை கோடவுனில் ஒப்படைக்கப்பட்டன.