ADDED : அக் 05, 2025 05:10 AM
தேனி : மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருவதால் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். .
தேனி கொடுவிலார்பட்டி அருகே சில மாதங்களுக்கு முன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணலை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். அதில் யார் போலீசில் புகார் அளிப்பது என நீர்வளத்துறை, வருவாய்த்துறை இடையே பிரச்னை நிலவியது. பின் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர். தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் ஆங்காங்கே மணல் திருட்டு அதிகரித்துள்ளது. ஜங்கால்பட்டி, கொடுவிலார்பட்டி பகுதி வைகை ஆற்றில் இரவில் மணல் திருட்டு தொடர்கிறது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர் ஆதரவு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் சிவலிங்நாயக்கன்பட்டி பிரிவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது டிரைவர் தப்பி ஓடினார்.
துணை தாசில்தார் சிவன்காளை புகாரில் 2யூனிட் மணல் உடன் டிராக்டரை கைப்பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மணல் திருட்டை தடுக்க நீர்வளத்துறையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.