ADDED : ஜன 05, 2026 05:15 AM
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்ட மநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவில் அகற்றப் பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஆண்டிபட்டி பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கலாவதி, சமூக ஆர்வலர்கள் செல்வம், மனோஜ் குமார், ஸ்ரீ நாக அக்கினி சிறகு மகளிர் குழு நிர்வாகிகள் சிவலட்சுமி, தேவிகா, தேசிய நெடுஞ்சாலை தொழில்நுட்ப உதவியாளர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் வேம்பு, மகாகனி உட்பட பல வகைகளை சேர்ந்த 300 மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

