ADDED : மே 13, 2026 04:14 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் கருணாபுரம் ஊராட்சியில் தூக்குபாலம் அருகே குழித்தொழு பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி இருந்த இரண்டு பஸ்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகின.
இங்குள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலை பள்ளி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க ஓரிரு வாரங்கள் உள்ளதால் பள்ளியில் பராமரிப்பு பணி நடந்து வருகின்றன.
நேற்று ' வெல்டிங்' பணிகள் நடந்து வந்த நிலையில், பள்ளி வளாகத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த பஸ்களில் காலை 11:00 மணிக்கு திடிரென தீப்பற்றியது.
கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்த தீயில் இரண்டு பஸ்கள் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின. நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் தீயை பரவ விடாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பள்ளியில் ' வெல்டிங்' பணிகள் நடந்ததால் மின் கசிவு மூலம் பஸ்கள் தீப்பற்றி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
