தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : மே 08, 2026 03:12 AM
போடி: தமிழகத்தில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆகஸ்டில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சர் (டைப்ரைட்டிங்), சுருக்கெழுத்தர் (சார்ட் ஹேண்ட்), சி.ஏ.ஓ., (கணினி) தேர்வுகள் நடை பெறும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.ஓ.ஏ., தேர்ச்சி பெற்றவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதி கட் ஆப் மதிப்பெண்கள் மூலம் எளிதில் வேலை வாய்ப்பை பெறலாம். இதனால் அதிக அளவில் மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டு தோறும் தேர்வு எழுதுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழக அளவில் இத்தேர்வுகள் பிப்ரவியில் நடந்தது. முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தட்டச்சு இளநிலை ஆங்கிலத்தில் 68.50 சதவீதமும், தமிழில் 77.90 சதவீதமும், தட்டச்சு முதுநிலை ஆங்கிலம் 56.02 சதவீதமும், தமிழில் 64.50 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை தேர்வில் 29.85 சதவீதமும், தமிழ் இளநிலை தேர்வில் 56.87 சதவீதமும், சுருக்கெழுத்து ஆங்கிலம் இடைநிலை தேர்வில் 20.78 சதவீதமும், சுருக்கெழுத்து முதுநிலை ஆங்கிலம் 41.32 சதவீதமும், தமிழில் 73.89 சதவீத மும் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆண்டு தோறும் சுருக்கெழுத்து தேர்வுக்கான தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
சுருக்கெழுத்து ஆசிரியர் கூறுகையில், தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் சென்ற ஆண்டு முதல் நன்கு சுருக்கெழுத்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு கணினி மூலம் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. எவ்வித குளறுபடியும் இல்லை.
பலர் அரசு அங்கீகாரம் பெற்ற சுருக்கெழுத்து பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிலாமல் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது' என்றார்.
