ADDED : ஜூன் 14, 2025 05:52 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்திற்கான சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஆண்டிபட்டி ஒன்றியம், திருமலாபுரத்தில் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலை வகித்தார். இம் முகாமில் 167 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, 10 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், 9 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அல்ட்ரா சவுண்ட் உபகரணம் மூலம் 17 மாடுகளுக்கு சினை பரிசோதனை, 6 மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது.
சிறந்த முறையில் கிடாரி கன்றுகளை வளர்த்துள்ள 3 விவசாயிகளுக்கும், நவீன கால்நடை மேலாண்மை மூலம் கால்நடைகளை பராமரிக்கும் 3 முன்னோடி விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மண்டல இணை இயக்குனர் கோயில் ராஜா, கோட்ட உதவி இயக்குனர் அப்துல் ரகுமான், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
இத் திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் மாதம் ஒரு முகாம் வீதம் 96 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைத்து ஒன்றியங்களிலும் தொலைதூர கிராமங்களை தேர்வு செய்து, விவசாயிகளின் இடத்திற்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். கால்நடை உதவி மருத்துவர் பால்ராஜ் நன்றி கூறினார்.