ADDED : ஜூன் 02, 2026 06:31 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 350 கன அடியில் இருந்து 256 ஆக குறைக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தென் தமிழகத்தில் நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்கவில்லை. இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், அணையில் நீர் இருப்பை பொறுத்து அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் தேவையற்ற நேரத்தில் கூடுதலாக தண்ணீரை திறந்து நீர் இருப்பு குறைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விட்டனர், என விவசாயிகள் கூறினர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் முடிவடைந்த சூழலில் தற்போது திறந்து விடப்பட்ட 256 கன அடி நீர் மூலம் ஒரு ஜெனரேட்டரில் 23 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
