UPDATED : அக் 15, 2026 04:42 PM
ADDED : அக் 15, 2026 04:39 PM
தேனி: மானியத்தில் மாடித்தோட்ட உபகரணங்கள் பெற மக்கள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் மாடித்தோட்டத்திற்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. 50 சதவீதம் மானியம் போக மீதம் ரூ.725 கட்டணமாக செலுத்த வேண்டும். உபகரணங்களாக வளர்ப்பு ஊடக பை 6, ஒரு கிலோ அளவிலான 6 தென்னை நார் கட்டிகள்(வளர்ப்பு ஊடகம்), காய்கறி, பழச்செடி, கீரை உள்ளிட்ட 6 வகையான விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி தலா 400 கிராம், வேப்ப எண்ணெணை 100 மி.லி., மண்புழு உரம் 2 கிலோ வழங்கப்படும். மாடித்தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் உழவன் செயலி மூலம் அல்லது அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
