ADDED : செப் 13, 2026 01:27 AM

தேனி: மாவட்டத்தில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது.
மாவட்டத்தில் இவ்வாண்டு பருவமழை பொய்த்தது. இதனால் வெயில் தாக்கம் அதிகரித்து வறட்சியான நிலை உள்ளது. கேரளாவில் பெய்த கனமழையால் முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனியில் குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. எனினும் பகலில் அதீத வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை தேனி, அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி, குன்னுார், முல்லை நகர், ள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
பெரியகுளத்தில் நேற்று மாலை 4:30 மணிக்கு வானம் மேக மூட்டமானது. மாலை 5:20 மணி முதல் ஒரு மணி நேரமாக சாரல் மழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசியது.
கூடலுார்: கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று மதியம் 2:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி நேரம் வரை நீடித்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமை அடைந்தது. கனமழைக்குப் பின் 3:30 மணிக்கு மேல் சாரல் மழை தொடர்ந்தது. கூடலுாரை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்தால் மானாவாரி நிலங்களில் உள்ள பயிர்களுக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
