கள்ள ஓட்டு போட்டதால் பெண்கள் போராடி டெண்டர் ஓட்டளித்தனர்
கள்ள ஓட்டு போட்டதால் பெண்கள் போராடி டெண்டர் ஓட்டளித்தனர்
ADDED : ஏப் 23, 2026 08:36 PM

தேனி:தேனி மாவட்டத்தில் மூன்று ஓட்டுச்சாவடிகளில் பெண்களின் ஓட்டுக்களை யாரோ கள்ள ஓட்டு போட்டதால் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து டெண்டர் ஓட்டு பதிவு செய்தனர்.
தேனி அல்லிநகரம் பாண்டியன் ஆயில்மில் தெருவை சேர்ந்தவர் யாழினி 19, முதல் தலைமுறை வாக்காளர். இவர் தனது ஓட்டை பதிவு செய்ய அல்லிநகரம் அரசு மாதிரி பள்ளி ஓட்டுச்சாவடிக்கு சென்று தனது ஆவணங்களை காட்டினார். அப்போது ஏற்கனவே யாழினி பெயரில், ஓட்டுப்பதிவாகிவிட்டதாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், 'நான் தற்போது தான் ஓட்டுப்பதிவு செய்ய வந்துள்ளதாக,' கூறி, விரலில் மை இல்லாததை காட்டினார். இதையடுத்து கள்ள ஓட்டு போடப்பட்டிருப்பது உறுதியானது. ஓட்டுச்சாவடி அலுவலர் அனுமதியுடன், டெண்டர் ஓட்டளிக்க 49 பி., படிவம் வழங்கி பேப்பர் பேலட் பெற்று யாழினி தனது ஓட்டை பதிவு செய்தார்.
பா.ஜ., த.வெ.க.,வினர் ஆதரவு:
உத்தமபாளையம்: காலேஜ் ரோட்டில் வசிப்பவர் ஹேமலதா, இவர் மதியம் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி ஓட்டுசாவடிக்கு ஓட்டளிக்க சென்றார். அவரது ஓட்டை வேறு ஒருவர் போட்டுசென்றதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தனது ஓட்டை எவ்வாறு வேறு ஒருவர் போடலாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். பா.ஜ., த.வெ.க., அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் அந்த இளம் பெண்ணிற்கு ஆதரவாக பேசினர்.
அங்கு வந்த உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகைதின் இப்ராகிம், தாசில்தார் பாலசண்முகம் ஆகியோர் அந்த இளம் பெண்ணிடமும், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் டெண்டர் முறையில் ஓட்டு போட அனுமதித்தனர். 'ஜனநாயக கடமையை நிறைவேற்ற போராட வேண்டியுள்ளது' என்று அந்த பெண் கூறினார். உத்தமபாளையம் பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாலை 4:00 மணிக்கு ஓட்டளிக்க வந்த மகேஷ்வரி என்பவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு சென்றிருந்தனர். இதனால் தேர்தல் அதிகாரியிடம் மகேஷ்வரி வாக்குவாதம் செய்தார். அந்த நேரத்தில் தேர்தல் பார்வையாளர் அங்கு வந்தார். பெண்ணிடம் விசாரித்து டெண்டர் ஓட்டளிக்க அனுமதித்தார். இதனை தொடர்ந்து டெண்டர் ஓட்டளித்தார்.
