/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'ஆங்கிலேயர் ஐரோப்பிய கலாசாரத்தை திணித்தனர்'
/
'ஆங்கிலேயர் ஐரோப்பிய கலாசாரத்தை திணித்தனர்'
ADDED : மார் 01, 2025 01:28 AM
திருநெல்வேலி, திருநெல்வேலியில் மதன் மோகன் மாளவியா வித்யா கேந்திரத்தின், 33வது ஆண்டு விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது அவர்கள் நம் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க முயன்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தேசபக்தி அர்ப்பணிப்பு உணர்வை மக்களிடம் வளர்த்தது. நம் அடையாளம், கலாசாரம் இன்னும் நிலைத்திருக்க, ஆர்.எஸ்.எஸ்., பெரும் பங்காற்றியது. ஆங்கிலேயர் பாரதிய கல்வி முறையை அழித்து, ஐரோப்பிய கல்வி முறையை திணித்தனர்.
நாம் அடிமையாக வாழ்ந்தோம். நம் அடையாளங்களை அழித்தனர். இதற்கு எதிராக மதன்மோகன் மாளவியா பாரதிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பனாரஸ் மத்திய ஹிந்து கல்லூரியை உருவாக்கினார்.
இந்தியா என்பது ஒரு அரசியல் நாடு. ஆனால் பாரதம் என்பது தொன்மை, நாகரிகம், கலாசாரத்தின் அடையாளம். புரட்சிகவிஞர் சுப்பிரமணிய பாரதி, 30 கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடியுள்ளார். ஆனால் தற்போது இந்த சிந்தனையும் 18 ஆக உடைந்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ராணுவம் நம் வடகிழக்கு எல்லையில் போரிட்டபோது, அதில் பங்கேற்று, 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் தமிழகத்தில் போராட்ட வீரர்களின் பட்டியல் கேட்டபோது, எனக்கு, 38 பேர் மட்டுமே உள்ள பட்டியல் கொடுக்கப்பட்டது. இது ஏற்கனவே திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறு. இதன் விளைவாக நாம் தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
'தமிழக மாணவர்களுக்கு மொழி சுதந்திரம் இல்லை'
திருநெல்வேலி அருகே செங்குளத்தில் அகில உலக அய்யாபதிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த அய்யா வைகுண்டரின், 193வது அவதார தின விழாவிற்கு தலைமை வகித்த கவர்னர் ரவி, தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் 'ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்' என்ற நுாலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: பாரதத்தில் வெவ்வேறு மொழி பேசுவோர், வெவ்வேறு இனத்தினர், உடை, உணவு கலாசாரங்களால் வேறுபட்டவர்களாக வாழ்ந்தாலும், நாம் அனைவரும் சனாதன குடும்பத்தினர் தான். சனாதன தர்மத்தில் வேறுபாடுகள் இல்லை. அதைத்தான் அய்யா வைகுண்டர் போதித்தார்.
பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், பிரதமர் மோடி யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்திற்கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார். மொழியை திணிக்கின்றனர் என்ற பொய்யையும், புரட்டையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் விதைக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் வென்றதாக சரித்திரம் கிடையாது.
மற்ற மாநில மாணவர்களை போல, விரும்பிய மொழிகளை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது இளைஞர்களுக்கும், அவர்கள் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
...........................