/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
புத்தக பையில் அரிவாள்; மாணவரால் பரபரப்பு
/
புத்தக பையில் அரிவாள்; மாணவரால் பரபரப்பு
UPDATED : செப் 12, 2024 05:11 AM
ADDED : செப் 12, 2024 12:39 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்கள் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக அரசும், போலீஸ் துறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், மருதகுளம், விஜயநாராயணம் உள்ளிட்ட பள்ளிகளில் சர்ச்சைகளில் சிக்கிய மாணவர்கள், அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, சங்கர் நகரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் இரு தரப்பாக ஜாதி ரீதியாக மோதிக்கொண்டனர். பள்ளியில் ஒரு விழா முடிந்து, தத்தம் வகுப்பு பெஞ்சுகளை எடுத்து போகும்போது, மாற்றி எடுத்துச் சென்றதால் தகராறு நடந்தது.
நேற்று காலை பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களின் பைகளில் மொபைல் போன் இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவரின் பையில் அரிவாள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
பாதுகாப்புக்காக அரிவாள் கொண்டு வந்த மாணவர், ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் மீது, தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.

