/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி மறுப்பு திருமணம் நெல்லை கம்யூ., ஆபீஸ் சூறை
/
ஜாதி மறுப்பு திருமணம் நெல்லை கம்யூ., ஆபீஸ் சூறை
ADDED : ஜூன் 15, 2024 01:57 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி, அன்பு நகரைச் சேர்ந்த முருகவேல் மகள் உதயதாட்சாயினி, 24; பட்டதாரி. அதே பகுதி நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன், 26. இருவரும் கல்லுாரியில் படித்த போது காதலித்தனர்.
இருவரும் நேற்று முன்தினம் திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட செயலர் ஸ்ரீராம் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மதன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் இரவில் உதயதாட்சாயினி பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. கட்சி அலுவலகத்தில் திருமணம் நடந்ததால் இருவரும் அங்கு இருக்கலாம் என, பெண் குடும்பத்தினர் அங்கு சென்றனர். உடன் அவர்களின் ஜாதி சங்கத்தினரும் வந்தனர்.
மாவட்ட செயலர் ஸ்ரீராமின் மனைவியும், கட்சியின் வழக்கறிஞருமான பழனி, மாணவர் சங்க மாவட்ட செயலர் அருள், மாநகராட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர். உள்ளே நுழைந்த, 30க்கும் மேற்பட்டோர் அலுவலக நாற்காலி, கண்ணாடிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அங்கிருந்த நான்கு பேரையும் தாக்கி கீழே தள்ளினர்.
மொபைல் போன்களும் பறிக்கப்பட்டன. கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் ஜாதி சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அக்கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.