/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேரை தெருவில் விட்ட அறநிலையத்துறை: 60 நாளாக மழை, வெயிலில் காயும் அவலம்
/
தேரை தெருவில் விட்ட அறநிலையத்துறை: 60 நாளாக மழை, வெயிலில் காயும் அவலம்
தேரை தெருவில் விட்ட அறநிலையத்துறை: 60 நாளாக மழை, வெயிலில் காயும் அவலம்
தேரை தெருவில் விட்ட அறநிலையத்துறை: 60 நாளாக மழை, வெயிலில் காயும் அவலம்
ADDED : செப் 07, 2024 12:29 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் ஜூலை 2ல் தேரோட்டம் நடந்தது. சுவாமி தேருக்கு பயன்படுத்திய வடம் அடிக்கடி அறுந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. திருச்செந்துாரில் இருந்து வேறு வடம் கொண்டு வரப்பட்டு, அதன்பின் தேரோட்டம் தொடர்ந்தது.
கோவிலில் அம்மன் சன்னிதி பகுதியில் மழை தண்ணீர் தேங்கிய இடத்தில், தேர் வடத்தை போட்டு வைத்திருந்தனர். அது நனைந்து நைந்து போனதே அறுந்ததற்கு காரணம்.
தேர் வடத்திற்கு ஏற்பட்ட கதி, தேருக்கும் ஏற்பட்டு விடுமோ என அஞ்சும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
தேரோட்டம் முடிந்ததும், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தேர்கள் கண்ணாடி கூண்டு, கூரை அமைக்காமல், 60 நாட்களாக மழையிலும் வெயிலிலும் காய்கின்றன. பெரிய தேரில் உள்ள பழமையான மரச் சிற்பங்கள் வெயிலில் காய்ந்து உடைந்து வருகின்றன.
இதுகுறித்து கோவில் தரப்பில் கேட்டபோது, 'தெற்கு மவுன்ட் சாலையில் மாநகராட்சி பணி நடப்பதால், பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நெல்லையப்பர் கீழ ரத வீதியில் மாற்றி விடப்பட்டுள்ளது. இதனால், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தேர் சிமென்ட் தள பணிகளை தொடங்க முடியவில்லை.
நாட்கள் அதிகம் ஆவதால் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை ரத்து செய்துவிட்டு, கண்ணாடி கூண்டு அமைக்க முடிவெடுத்து உள்ளோம்' என்றனர்.
வடம் விஷயத்தில் அக்கறையின்றி இருந்தது போல், தேர் விஷயத்திலும் இருந்துவிடக்கூடாது.
தேரை முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அக்கறையோடு செயல்பட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.