/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஊழலுக்கு துணை போகாத பெண் அதிகாரி மாற்றம்: டிரான்ஸ்பரில் உள்ள கமிஷனர் நடவடிக்கை
/
ஊழலுக்கு துணை போகாத பெண் அதிகாரி மாற்றம்: டிரான்ஸ்பரில் உள்ள கமிஷனர் நடவடிக்கை
ஊழலுக்கு துணை போகாத பெண் அதிகாரி மாற்றம்: டிரான்ஸ்பரில் உள்ள கமிஷனர் நடவடிக்கை
ஊழலுக்கு துணை போகாத பெண் அதிகாரி மாற்றம்: டிரான்ஸ்பரில் உள்ள கமிஷனர் நடவடிக்கை
UPDATED : ஜூலை 19, 2024 12:16 PM
ADDED : ஜூலை 18, 2024 07:23 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில், 55 லட்சம் ரூபாய் பினாயில் ஊழலுக்கு துணை போகாமல், நேர்மையாக செயல்பட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சரோஜாவை பணியிலிருந்து விடுவித்து, கமிஷனர் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் கடந்த டிச., 17, 18ல் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மாநகராட்சி கமிஷனர் தாக்கரே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தார். ஓரிரு தினங்களில் வெள்ளம் கட்டுக்குள் வந்ததாலும் பெரிய பாதிப்பு இல்லாததாலும் அந்த பொருட்களை வாங்கவில்லை.
மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா, 2024 ஜன., 1 முதல் பிப்., 26 வரை உடல் நலம் பாதித்து விடுப்பில் சென்றார். அப்போது பொறுப்பு சுகாதார அலுவலராக பணியாற்றிய டாக்டர் ஆனி குயின், 14.57 லட்சம் ரூபாய் மதிப்பில் பினாயில் வாங்க, கூட்டுறவு துறைக்கு கடிதம் அனுப்பினார். பினாயில் உள்ளிட்ட சரக்குகள் வந்தன.
மார்ச் மாதம் டாக்டர் சரோஜா மீண்டும் சுகாதார அலுவலராக பொறுப்பேற்றார். அப்போது கூட்டுறவுத் துறையில் இருந்து பினாயில் வாங்கியதற்கு, 55 லட்சம் ரூபாய்க்கு பில் வந்தது. 14 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே சரக்குகள் வாங்கிய நிலையில், 55 லட்சம் ரூபாய்க்கு காசோலை தர முடியாது என சரோஜா மறுத்தார்.
காசோலையில் கையெழுத்திடுமாறு அவருக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்தனர். இருப்பினும், பினாயில் ஊழலுக்கு துணை போக அவர் மறுத்தார்.
பினாயில் ஊழல் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், கமிஷனர் தாக்கரே மீது, சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதற்கிடையே ஜூலை 16ல் தாக்கரே, ஈரோட்டுக்கு வணிக வரித்துறை அதிகாரியாக மாற்றப்பட்டார். அதன் பின், சரோஜாவை நேற்று பணியில் இருந்து விடுவிப்பதாக கமிஷனர் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பணி மாற்றம் செய்யப்பட்டதால், கமிஷனர் இன்னொரு துறை அதிகாரியான சரோஜா மீது நடவடிக்கை எடுக்க முடியாது என மாநகராட்சி அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சரோஜா கூறுகையில், ''ஊழலுக்கு துணை போக முடியாது என மறுத்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல. நான் சுகாதாரத் துறையில் இருந்து அயல் பணியில் வந்துள்ளேன். எனவே, இந்த உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வேன்,'' என்றார்.