/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு
/
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு
ADDED : மே 17, 2024 01:12 AM
திருநெல்வேலி:தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாஞ்சோலையில்,பிபிடிசிஎல் 99 ஆண்டு குத்தகை காலம் 2028ல் முடிவடைய உள்ளதால், நான்கு தலைமுறை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் மலைப்பகுதியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுகின்றனர். மாஞ்சோலை தோட்டத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி என 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. மொத்தமாக இங்கு சுமார் 700 குடும்பங்கள் வரை வசிக்கின்றன. பெரும்பாலும் வாசுதேவநல்லுார், நாரைக்கிணறு, உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த குடும்பங்களில் பெரும்பாலானோருக்கு தேயிலை தோட்டத் தொழிலே வாழ்வாதாரமாக உள்ளன. தற்போது சுமார் 2,150 பேர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தின் குத்தகைக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் மாஞ்சோலையில் இருந்து தொழிலை முடித்துக் கொள்ளும் பணியை துவங்கியுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதியில் உள்ள தொழிலாளர்களும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாஞ்சோலை பகுதி தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 பிரிவு 16 இன் கீழ் காப்பு காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரமும், இருப்பிடமும் கேள்விக்குறியாகி உள்ளது.
பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைந்த பிறகு, அங்குள்ள தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில், தேயிலைத் தோட்டத்தை மாநில அரசு கையகப்படுத்தி, தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர்.
மாநில அரசு முன்வருமா:
தமிழக அரசு, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், வால்பாறை தேயிலை தோட்டங்களை போன்று மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை கையகப்படுத்தி, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான் டீ) மூலமாக தொடர்ந்து தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு நான்கு தலைமுறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுக்காக கூட்டுறவு சங்கம் உருவாக்கி, அவர்களின் வேலைக்கேற்ப ஊதியத்தை மாநில அரசே வழங்க வேண்டும். அனைத்து உரிமைகளும், பணப்பலன்களும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இலவச பட்டா:
காப்பு காடுகளுக்காக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடும் பட்சத்தில், தற்போதுள்ள மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, வெளியூர்களில் அவர்களுக்கு இலவச பட்டா நிலம் வழங்கி அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலவச வீட்டு மனை கிடைக்குமா:
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி கூறும் போது, ''தோட்ட தொழிலாளர்களின் சூழ்நிலையை கருதி கடந்த ௨௦௧௯ம் ஆண்டு தெற்கு பாப்பான்குளத்தில் ௫௦௦க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார், யாருக்கு எந்த இடம், எவ்வளவு இடம், எந்த பகுதி என்பது குறித்து அப்பகுதி வருவாய் துறை அதிகாரிகளால் அளவீடு செய்து உரியவர்களிடம் வீட்டு மனைகள் ஒப்படைக்க வேண்டும். தனியார் நிறுவனம் குத்தகை காலம் முடிந்து வெ ளியேறினால் அங்கு பல தலைமுறைகளாக வாழக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்களன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ௫ ஏக்கர் வரையிலும் தற்போது உள்ள தேயிலை தோட்டங்களை வழங்கி அதனை பராமரித்து வருமானத்தை பெருக்கி கொள்ளவோ அல்லது காய்கறி பயிரிடவோ உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்”” என்றார்,
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறும் போது, ''மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க நாங்கள் குரல் கொடுப்பதோடு, அவர்களோடு இணைந்து களத்தில் போராடும்”” என்றார்.
பாக்ஸ்
தொழிலாளர்களுக்கு
சலுகைகள் அறிவிப்பு
இந்நிலையில் தனியார் நிறுவனம் அறிவித்த விருப்ப ஓய்வு திட்டத்தை தொழிலாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வாங்கினால் உடனடியாக ௫௦ சதவீத பணமும், தொடர்ந்து வீடுகளை ஒப்படைத்த பிறகு மீதம் ௫௦ சதவீத பணமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வில் சென்றால் குறைந்தபட்சம் ஒரு தொழிலாளருக்கு குறைந்தபட்சம் ௩ லட்சம் ரூபாய் முதல் ௫ லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்பறை எஸ்டேட்டிற்கு பணிக்கு செல்ல விரும்பினால் அதற்கு கூடுதலாக பயணப்படி ௧௦ ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது. வரும் ௩௧ம் தேதிக்குள் இப்பணிகள் அனைத்தையும் முடிக்க எஸ்டேட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பாக்ஸ்....
வனத் துறை மூலம்
சூழல் சுற்றுலா வசதிக்கு ஏற்பாடு
மாஞ்சோலை பகுதியில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமாக நான்கு பங்களாக்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றை வனத் துறையினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த பங்களாக்களில் வனத்துறை அலுவலகங்களை அமைக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு, மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி பகுதிகளை உள்ளடக்கி வனத் துறை மூலம் சூழல் சுற்றுலா வசதி ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த இடங்களுக்கு செல்ல வாகன வசதி, உணவு வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், கேரளாவை போல் மலை பகுதிகளில் சாகச விளையாட்டுகள், படகு சவாரி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாக்ஸ்....
கலெக்டருடன்
ஆலோசனை
மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அவர்களின் வீடுகளை காலி செய்யவும், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால் தேர்தலுக்கு பிறகு இப்பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தேயிலை தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டருடன் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைகளையும் நடத்தியுள்ளனர்.
--

