/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜெயகுமார் மரணம் - தங்கபாலு பேட்டி, விசாரணை
/
ஜெயகுமார் மரணம் - தங்கபாலு பேட்டி, விசாரணை
ADDED : மே 07, 2024 10:57 PM

எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம் தனியார் கல்லுாரியில் விசாரணை
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயகுமார், 58. தமக்கு மிரட்டல் இருப்பதாக அவர் கடிதம் எழுதி இருப்பதால், இதை தற்கொலை என எளிதாக முடித்து விட போலீசாரால் முடியவில்லை.
மேலும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதால், அவர்களிடமும் விசாரணை நடக்கிறது. இதனால், எந்த முடிவுக்கு வருவது என்பதில் போலீசார் திணறுகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 78 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறியிருந்த நாங்குநேரி காங்., - எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம், நேற்று தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகே, தனியார் கல்லுாரி வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அவரிடம் அறிக்கை பெறப்பட்டது.
அதுபோல, 11 லட்சம் தருவதாக கூறியிருந்த தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து விமானத்தில் துாத்துக்குடி வந்தவர், நேற்று மதியம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு வந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை செய்து, அவர் தரப்பு அறிக்கையை பெற்றனர்.
மரண வாக்குமூலத்தில் எழுதியிருந்ததுதவறு என்கிறார் தங்கபாலு
விசாரணை குறித்து தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு கூறியதாவது:
இந்த சம்பவத்தில் போலீசார் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இங்கே விசாரணைக்கு வந்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். வாக்குமூலம் அறிக்கையும் தந்துள்ளேன். ஜெயகுமாருக்கு நான் பணம் தர வேண்டும் என்பதும் அதை எம்.எல்.ஏ., மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென, நான் கூறியதாக அவர் குறிப்பிட்டிருப்பதும் பொய்யானது; உண்மைக்கு புறம்பானது.
தமிழக அரசியலில் 54 ஆண்டுகளாக பயணிக்கிறேன். இதுவரையிலும் யாரும் எனக்கு பணம் தந்ததாகவோ, நான் வாங்கியதாகவோ எந்த குற்றச்சாட்டும் இல்லை.
நான் ஜெயகுமாரிடம் பணம் வாங்க வேண்டிய அவசியத்தில் இல்லை. பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை.
இந்த மரணம் துரதிஷ்டவசமானது. ஜெயகுமார் கடிதத்தில், என்னைப் பற்றி குறிப்பிட்டு இருந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. எதற்காக, எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது என, அழுத்தமாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

