/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின
/
சாலையில் திரிந்த மாடுகள் அப்பாவியை காவு வாங்கின
ADDED : ஜூன் 23, 2024 09:23 AM
திருநெல்வேலி, : தமிழகத்தில் சாலையில் திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த வரிசையில், நேற்று திருநெல்வேலி நகர் பகுதியில், இரு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு மோதியதில், சாலையில் டூ - வீலரில் சென்ற அப்பாவி கோர்ட் ஊழியர், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி, பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ், 58. திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் கோர்ட் சம்மன் கொடுக்கும் பணிக்காக மொபட்டில் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார்.
தெற்கு பைபாஸ் ரோடு சீரமைப்பு பணியால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இவர் டூ - வீலரில் சென்ற பகுதியில், சாலையில் திரிந்த இரு மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில், ஒரு மாடு, வேலாயுதராஜ் டூ - வீலர் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட அவர், அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான 'சிசிடிவி' காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.