ADDED : நவ 13, 2026 10:03 PM

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7வது தெருவில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த நவமணி, விஜய் ஆகியோருக்குச் சொந்தமான ஆட்டோவை வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் நிறுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, ஆட்டோ தீப்பற்றி எரிவதாக அப்பகுதி இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நவமணி, விஜய், குடும்பத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி., ரகுபதி ராஜா, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அங்கு மதுபாட்டில்கள் கிடந்தன. மர்ம நபர்கள் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திவிட்டு தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
