/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லஞ்சம் வாங்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
/
லஞ்சம் வாங்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ADDED : பிப் 18, 2025 06:40 AM

திருநெல்வேலி : கார் பதிவிற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வள்ளியூரில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகம் உள்ளது.
பிரேக் இன்ஸ்பெக்டராக பெருமாள் உள்ளார்.
வள்ளியூர், லுாதர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம். மனைவி சுதா வள்ளியூர் டவுன் பஞ்சாயத்தில் 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். 2024 மார்ச்சில் காரை வாங்கினார்.
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பதிவு செய்து ஓட்டினார். அவர் வெளியூர் சென்றதால் நிரந்தர பதிவு பெற தாமதமானது.
நிரந்தர பதிவிற்காக வாகன பதிவு சான்று கட்டணம், ஆயுள் கால வரி, மற்றும் தாமத கட்டணம் சேர்ந்து மொத்தம் ரூ. 4 லட்சத்து 35 ஆயிரத்து 490 கட்டணமாக செலுத்தினார். வள்ளியூர் பிரேக் இன்ஸ்பெக்டர் பெருமாள் வாகனத்தை ஆய்வு செய்தார்.
சான்றிதழ் தர ரூ. 20,000 லஞ்சம் கேட்டார். தொகை அதிகமாக இருக்கிறது என சுரேஷ் பாக்கியம் கூறினார். அவரது நண்பர் வள்ளியூர் 1வார்டு கவுன்சிலர் லாரன்ஸ் மூலம் பெருமாளிடம் பேசினார்.
பெருமாள் கடைசியாக ரூ. 15,000 கண்டிப்பாக தரவேண்டும் என கூறினார். பெருமாள் கூறிய 99626 14070 என்ற எண்ணில் கூகுள் பே மூலம் ரூ.10,000ஐ ஜன., 28ம் தேதி சுரேஷ் பாக்கியம் அனுப்பினார். மீதமுள்ள ரூ 5000த்தை தந்தால் தான் ஆர்.சி., புக்கை தருவேன் என பெருமாள் தெரிவித்தார்.
சுரேஷ் பாக்கியம், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெக்லரின் எஸ்காலிடம் புகார் தெரிவித்தார். கவுன்சிலர் லாரன்ஸ், பெருமாளிடம் லஞ்ச பணத்தை குறைக்க சொல்லி கேட்கும் இரண்டு ஆடியோக்களையும் ஒப்படைத்தார்.
அதில் பெருமாள், ரூ.40 லட்சத்துக்கு கார் வாங்க முடிகிறது. ரூ.20,000 தர முடியாதா என கேட்கிறார். அப்படியே போனாலும் என் மீது ஒரு வழக்கு தானே போடுவார்கள். பார்த்துக்கொள்கிறேன். என்ன உயிரா போகப்போகுது... பார்த்து விடுவோம் ... என பேசும் ஆடியோ வெளியானது.
இந்த ஆடியோக்கள் அடிப்படையில் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜன.,29ல் வழக்கு பதிவு செய்தனர். பின் சில நாட்களாக பெருமாள் பணிக்கு வரவில்லை. ஒரே ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் கொண்ட வள்ளியூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பணிகள் நடக்காமல் ஒரு வாரம் மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து திருநெல்வேலியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணகுமார் கூறுகையில், பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தது தொடர்பாக அவர் போலீசிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சில தினங்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார் நேற்று பணியில் சேர்ந்து விட்டார் என்றார்.
லஞ்சம் கேட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் மேல் நடவடிக்கை எடுக்காமல் அவர் தொடர்ந்து பணி செய்வது எப்படி என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

