/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நகைக்கடன் தருவதில் தாமதம் வங்கி கண்ணாடி உடைப்பு
/
நகைக்கடன் தருவதில் தாமதம் வங்கி கண்ணாடி உடைப்பு
ADDED : ஜன 12, 2025 12:19 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை கடன் வழங்க தாமதமானதால் வங்கி கண்ணாடியை உடைத்தவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
பணகுடி அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த சிவதாணு 40, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மோதிரத்தை அடகு வைத்து ரூ.15,000 கடன் கேட்டார். அவரது வங்கி சேமிப்பு கணக்கில் சமீபகாலமாக வரவு செலவு செய்யாததால் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. கணக்கு சீர் செய்யப்பட்டு பணத்தை மாலையில் ஏ.டி.எம்., மூலம் தான் எடுக்க முடியும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக பணம் கிடைக்காவிட்டால் நகையை திருப்பித் தர கேட்டார். ஊழியர்களும் மோதிரத்தை திருப்பி அளித்தனர். நீண்ட காலம் வங்கியில் கணக்கு வைத்திருந்தும் உடனடியாக கடன் பெற முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் மேலாளர் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் வலது கையால் அங்கிருந்த கண்ணாடி தடுப்பில் ஓங்கி அறைந்தார். இதில் கண்ணாடி உடைந்து அவரது கையில் குத்தியது.
அவரது கையிலிருந்து ரத்தம் கொட்டியது. வங்கி மேலாளர் பிரவீன் பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

