நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் "டெங்கு' போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் "டெங்கு' போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
ADDED : ஜன 17, 2013 03:13 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட பகுதிகளில் பரவலாக டெங்கு காணப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக டெங்கு நோய் பரவி காணப்படுகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பரவலாக ஆங்காங்கே இந்நோயினால் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதார துறை, மருத்துவ துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தெருக்களில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரை அகற்றவும் போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் கொசு தடுப்பு மருந்தையும் அடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
மேலும், நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு போன்றவற்றையும் போதுமான அளவில் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலாக காணப்படும் சூழ்நிலையில் டெங்கு நோய் குறித்து உண்மையான தகவல்களை வெளியிட அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். டெங்கு நோயை உறுதிப்படுத்தும் சோதனை நடைமுறைகளால் மர்ம காய்ச்சல் என்றே டெங்கு நோயை குறிப்பிடுகின்றனர்.
எனவே, டெங்கு நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போர்க்கால நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
