/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு
/
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளின் வரதட்சணை புகாரால் பரபரப்பு
ADDED : ஏப் 17, 2025 02:14 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி அல்வாவுக்கு பெயர் பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் மகள், தன் கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி டவுன், நெல்லையப்பர் கோவில் எதிரே, 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டுக்கடை என்ற பெயரில் அல்வா கடை நடத்தி வருபவர்கள் ஹரிசிங் குடும்பத்தினர்.
தற்போது கடையை, கவிதா சிங், அவரது கணவர் ஹரிசிங் கவனிக்கின்றனர். இவரது மகள் ஸ்ரீகனிஷ்காவிற்கு பிப்., 2ல் திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. மணமகன், கோவையைச் சேர்ந்த யுவராஜ்சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங். திருமணத்துக்கு பின், 41 நாட்கள் மட்டுமே ஸ்ரீகனிஷ்கா கோவையில் கணவர் வீட்டில் இருந்துள்ளார்.
கணவர், தன்னை ஒரு வேலைக்காரி போல நடத்துவதாகவும், அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த பெண்ணையும் அழைத்து வந்து ஒன்றாக வீட்டில் இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
ஸ்ரீகனிஷ்கா மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். யுவராஜ் சிங் தரப்பினர், 'கூடுதலாக வரதட்சணை வேண்டும்; 1.5 கோடி ரூபாய் உயர்ரக 'டிபெண்டர்' கார் வேண்டும்; இருட்டுக்கடையை தங்கள் பெயருக்கு எழுதி தர வேண்டும்' என, கேட்பதாக கவிதாசிங் கூறினார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியை சந்தித்து கவிதாசிங் புகார் அளித்தார். தொடர்ந்து, யுவராஜ் சிங் குடும்பத்தார் மீது கவிதாசிங் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கோவையில் தன் வீட்டில் நிருபர்களை சந்தித்த யுவராஜ் சிங், கவிதா சிங் குடும்பத்தார் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.