/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை, தாய், மகனுக்கு 7 ஆண்டு சிறை
/
அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை, தாய், மகனுக்கு 7 ஆண்டு சிறை
அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை, தாய், மகனுக்கு 7 ஆண்டு சிறை
அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை, தாய், மகனுக்கு 7 ஆண்டு சிறை
ADDED : அக் 23, 2025 12:53 AM
திருநெல்வேலி: ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத்தண்டனையை திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் உடையார்விளையை சேர்ந்தவர் அர்ஜுனன் (75), நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியிருந்தார். இதனால் அருகிலுள்ள வசுமதி என்பவரது வீட்டிற்குச் செல்லும் வழி தடைபட்டது. இதுகுறித்து வசுமதி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 2008ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி தக்கலை நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் சுந்தரம், உதவி கோட்ட இன்ஜினியர் அந்தோணி சேவியர் மற்றும் போலீஸ்காரர் வின்சென்ட் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அர்ஜுனன், அவரது மனைவி கனீஷ்பாய் 67, மருமகன் ரசல்ராஜ் 52 ஆகியோர் பணியை செய்ய விடாமல் தடுத்து, அதிகாரிகளிடம் அவதூறாக பேசினர்.
அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் 41, காரை ஓட்டி வந்து அதிகாரிகள் மீது மோதினார். இதில் இன்ஜினியர் சுந்தரம், அந்தோணி சேவியர், வின்சென்ட் காயமுற்றனர்.
சுந்தரம் புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் கொலை முயற்சி மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்தனர்.
வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 2023ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நால்வருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி நால்வரும் திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், நால்வரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 7 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தார்.