/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோவிலில் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்
/
நெல்லையப்பர் கோவிலில் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்
ADDED : ஜன 04, 2024 10:32 PM
திருநெல்வேலி:தமிழக அரசின் 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த வெளிநாடு தமிழர்கள் பல்வேறு முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.
வெளிநாடு தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக, தமிழக அரசு அயலகத் தமிழர் தினம் எனும் சிறப்பு தினத்தை அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.
வெளிநாடு தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களை தேடி என்ற பண்பாட்டு பயண திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வியப்பு
வேர்களை தேடி திட்டத்தின் முதல் பயணம் கடந்த டிசம்பர் 27ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இருந்து தொடங்கியது.
ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு நெல்லைக்கு நேற்று காலை வந்தனர்.
தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் உள்ள சிற்பங்கள், இசைத்தூண்கள், சிலைகள், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தாமிரசபை மரச்சிற்பங்களின் நுட்பமான வடிவமைப்பையும் கண்டு வியந்தனர்.
பின்னர் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்திலுள்ள நூல்கள், வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளிக்காட்சியினை பார்வையிட்டனர்.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் வரலாறு, வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதில் மறுவாழ்வு துறை துணை ஆட்சியர் செண்பகவல்லி, சுற்றுலா அலுவலர் சிவராமன், அகதிகள் பிரிவு தாசில்தார் திருப்பதி, எழுத்தாளர் நாறும்பூநாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், கோயில் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுபவம்
தொடர்ந்து மதுரை, திருச்சி, செஞ்சிக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அயலகத் தமிழர்கள், தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரப் போராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ளவிருக்கிறார்கள்.
வரும் 11, 12ம் தேதிகளில் சென்னையில் நடக்கும் அயலகத் தமிழர்கள் தின நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.