/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.2.5 கோடி நிலம் பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்: குமரி பெண் கைது
/
ரூ.2.5 கோடி நிலம் பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்: குமரி பெண் கைது
ரூ.2.5 கோடி நிலம் பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்: குமரி பெண் கைது
ரூ.2.5 கோடி நிலம் பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம்: குமரி பெண் கைது
ADDED : பிப் 06, 2025 02:36 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ரூ 2.5 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் லட்சுமணன் 52. சென்னை ஆழ்வார்பேட்டை, சீதம்மாள் காலனியில் வசிக்கிறார். இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் திருநெல்வேலி வி.எம். சத்திரம் ஆச்சிமடம் பகுதியில் உள்ளது. அதன் மதிப்பு ரூ 2.5 கோடியாகும்.
அந்த நிலத்தை லட்சுமணன் தமது சகோதரி ஸ்ரீ வள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். ஸ்ரீ வள்ளி தற்போது அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
அந்த நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான ஜெரால்ட் செல்வராஜ் என்பவர், 2.5 ஏக்கர் நிலத்தை விற்பனைக்கு தருமாறு கேட்டார். அதற்கு ஸ்ரீவள்ளி மறுத்தார்.
இதனிடையே 2024 செப்டம்பரில் போலியான பத்திரப்பதிவு செய்தனர். ஸ்ரீ வள்ளியை போல கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணை அழைத்து வந்து இவர்தான் ஸ்ரீவள்ளி என போலியான ஆதார் அட்டை தயார் செய்து அவர் ராஜசேகர் என்பவருக்கு பவர் பத்திரம் தருவது போல ஒரு பதிவு செய்தனர். பின்னர் அண்ணாதுரை என்பவருக்கு ராஜசேகர் நிலத்தை விற்றார்.
தகவலறிந்த லட்சுமணன் திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நிர்மலாவை கைது செய்தனர். ஜெரால்டு செல்வராஜ், ராஜசேகர், அண்ணாதுரை ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அரசு வழங்கிய பத்திரிகையாளர் குடியிருப்பில், இறந்து போன பத்திரிகையாளர் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை இதே போல ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்தனர்.
இது குறித்து நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இத்தகைய நில மோசடி வழக்குகளில் போலீசார் கைது நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.