ADDED : ஆக 06, 2025 11:00 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பீட்டர் மகன் பிரபுதாஸ், 27, பட்டியலினத்தை சேர்ந்தவர். மரவேலைகள் செய்து வந்தார். நேற்று மதியம் நிலம் அளக்க வேண்டும் என யாரோ ஒருவர் அழைத்ததால் சென்றார்.
அதற்காக நண்பர் தமிழரசன் என்பவருடன், டூ - வீலரின் பின் சீட்டில் அமர்ந்து கோலியன்குளம் நோக்கி சென்றனர். செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் டூ - வீலர் ரோட்டோரமாக விழுந்து கிடந்தது. தமிழரசன் மயக்கமடைந்து கிடந்தார்.
பிரபுதாஸ் கழுத்தில் பலத்த வெட்டு காயம் தலை, உடல், விரலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபுதாஸ் உறவினர்கள் இந்த சம்பவம், கொலை தான் எனக்கூறி ராதாபுரம் அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில நாட்களுக்கு முன் வாகனம் மோதி பிரபுதாஸ் காயமுற்றார். அப்போது தன்னை கொலை செய்ய சிலர் திட்டமிடுவதாக போலீசிலும் அவர் புகார் செய்திருந்தார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், 'மயக்கமடைந்த தமிழரசன் சுயநினைவுக்கு வந்தால் மட்டுமே என்ன நடந்தது என தெரியும்' என்றனர்.