/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை, தென்காசி அணைகள் வறண்டன தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா
/
நெல்லை, தென்காசி அணைகள் வறண்டன தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா
நெல்லை, தென்காசி அணைகள் வறண்டன தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா
நெல்லை, தென்காசி அணைகள் வறண்டன தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா
ADDED : மே 14, 2025 02:50 AM

திருநெல்வேலி:ஏப்ரல், மே மாதங்களில் நிலவி வரும் வறட்சியால் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் வறண்டு விட்டன.
இம்மாவட்டங்களில் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்தது. நீர்நிலைகள், குளங்களில் நிலத்தடி நீர் தாக்கு பிடித்தது. இருப்பினும் அணைப்பகுதிகளில் மழையில்லாததால் நீர் வரத்து இல்லை. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என குறைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான பாபநாசம் அணையின் மொத்த நீர் மட்டம் 143 அடியாகும். நேற்று காலை 83 அடி மட்டுமே இருந்தது. அணைக்கு வினாடிக்கு 83 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து 300 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
மொத்தம் 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணையில் 85 அடி நீர்மட்டமே உள்ளது. அணைக்கு நீர் வரத்து இரண்டு கன அடி மட்டுமே இருந்தது. அணையில் இருந்து 45 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 50 அடி உயரமுள்ள வடக்கு பச்சையாறு அணையின் நீர் மட்டம் 10 அடியே உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையிலிருந்து நீர் வெளியேற்றமும் இல்லை.
மொத்தம் 22 அடி உயரம் உள்ள நம்பியாறு அணையில் 13 அடி நீர் மட்டுமே உள்ளது. நீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை. 52 அடி உயரமுள்ள கொடுமுடியாறு அணையில் 14 அடி மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 10 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வரத்துள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது அந்தமான் பகுதியில் துவங்கி விட்டதாக வானிலை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இம்மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையின் வருகையை பொருத்தே கார் பருவ நெல் சாகுபடி பணிகள் துவங்கும்.