/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:
/
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:
UPDATED : மே 09, 2024 05:55 PM
ADDED : மே 06, 2024 12:15 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தில், மர்மம் நீடித்து வருகிறது. அவர் எழுதியதாக நேற்று இரண்டாவது கடிதம் வெளியான நிலையில், எரிந்த உடலில் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், இது கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதுாரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், 58. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவரை மே, 2ம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என, அவரது மகன் கருத்தையா ஜெப்ரின், உவரி போலீசில், 3ம் தேதி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையை துவக்கிய போது, அவர் தனது லெட்டர் பேடில், திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனுக்கு எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தன் சொத்துக்களை மீட்டு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் முடித்துள்ளார்.
அந்த கடிதம் வெளியானதால், அவரை யாரோ கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரைசுத்து புதுாரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அருகில், அவரது தென்னந்தோப்பில் முழுதும் எரிந்து கரிக்கட்டை போல ஜெயக்குமார் உடல் கிடந்தது.
ஒப்படைப்பு
சம்பவ இடத்தில் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா, தீக்குளித்து இறந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இருப்பினும், கை, கால்கள் மின்சார ஒயரால் கட்டப்பட்டிருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில், அவரது உடலுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்., குழு தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். உடல் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ''ஜெயக்குமார் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சி பிரமுகர், தொழிலதிபராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடமும், காவல் துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
''காங்கிரஸ் சார்பில் கமிட்டி அமைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கையை தேசிய தலைமையிடம் வழங்குவேன்,'' என்றார்.
அடக்கம்
ஜெயக்குமாரின் உடல் கரைசுத்துபுதுார் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சி.எஸ்.ஐ., சர்ச்சில் அடக்க ஆராதனை நடந்தது.
இறுதி நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., கல்லறை தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெயக்குமார் இறப்பில் இரண்டாவது நாளாக மர்மம் நீடிக்கிறது. இதில், நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. மே, 2 மாலை வீட்டிற்கு காய்கறி வாங்கிக் கொடுத்து விட்டு, காரில் கிளம்பிய ஜெயக்குமார், மனைவியிடம், திருநெல்வேலி சென்று வருவதாக போனில் கூறியுள்ளார்.
பின், இரவில் அவர் எப்போது வீட்டிற்கு வந்தார்; அவரது கார் வீட்டு முன் எப்படி வந்தது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் இரண்டு நாட்களாக செயல்படாமல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது ஏன்; அவர் உடலில் மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவை ஊற்றி எரித்ததாக தெரியவில்லை.
அதற்கான கேன்கள் எதுவும் அருகில் இல்லை என, தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரின் கை, கால்கள் எலக்ட்ரிக் ஒயரால் கட்டப்பட்டிருந்தன. ஒருவேளை மின்சார ஷாக் கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும், போலீசார் விசாரிக்கின்றனர்.
மே 2 மாலை காணாமல் போன ஜெயக்குமார் தேடப்பட்ட போது, வீட்டுக்கு அருகிலேயே எரிந்து கிடப்பதை ஏன் யாரும் பார்க்காமல் விட்டனர். 3ம் தேதி போலீசில் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களுடன், அவரது மகன் புகார் கொடுத்துள்ளார்.
போலீசில் கொடுத்த கடிதங்களை போலீசார் ஒரு போதும் வெளியிடுவதில்லை. மேலும், ஐந்து பக்க முதல் கடிதம் நேற்று முன்தினம் சென்னையில் சில மீடியாக்காரர்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. போலீசுக்கே தெரியாத கடிதம் திசையன்விளையிலோ, திருநெல்வேலியிலோ வெளியிடாமல் சென்னையில் வெளியிடப்பட்டதன் காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக இரண்டாவது கடிதம் நேற்று பகலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடிதங்களை சிறப்பாக, 'பிடிஎப் பைலில்' மீடியாக்களுக்கு வெளியிட்டது யார்?
இரண்டு கடிதங்களிலும் எழுதப்பட்டது ஏப்., 30 என இருந்தாலும், அவை மே, 2ல் எழுதப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
முதல் கடிதத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் போன்றோர் தனக்கு தர வேண்டிய லட்சக்கணக்கான பணத்தை எப்படியும் பெற்று விட வேண்டும் என, ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார்.
நேற்றைய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யும் என, குறிப்பிட்டு இருந்தார். சம்பவ இடத்தில் விசாரணைக்கு உதவிய மோப்பநாய் தோட்டத்தை தவிர வேறு எங்கும் செல்லவில்லை.
இவ்வாறு ஜெயக்குமார் இறப்பில் பற்பல சந்தேகங்கள், கேள்விகள் எழுகின்றன. முதலில் இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டாலும், அவரது கை, கால்கள் மின் ஒயரால் கட்டப்பட்டு இருந்ததன் வாயிலாக, அதில் கொலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் மே 3 மாலை புகார் அளித்த போது, தந்தை எழுதிய இரண்டு கடிதங்களையும் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மே 3 மாலையிலேயே ஏன் போலீசார் அது குறித்து பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தவில்லை.
மேலும் ஒரு நாள் தாமதமாக இன்னொரு கடிதம் வெளியிடப்பட்டதன் மர்மம் என்ன? யாரால் வெளியிடப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த கடிதமும் ஏப்., 30ல் எழுதியதாக உள்ளது.
அவரது கடிதங்கள் தற்கொலை முயற்சிக்கு முந்தைய மன ஓட்டத்தில் எழுதியது போல இருந்தாலும், சம்பவ இடத்தில் மின் ஒயரால் கட்டப்பட்டு கிடப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரின் விசாரணைக்கு பிறகே மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.