UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் டூவீலரை மறித்து மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் ஓட்டல் தொழிலாளி படுகாயமடைந்தார்.
மேலப்பாளையம் ஆண்டவர் தெருவை சேர்ந்த காஜா ஷெரிப் 61, அப்பகுதி ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று சீவலப்பேரி ரோட்டில் உள்ள ஓட்டல் கிளையில் பணியை முடித்துவிட்டு, டூவீலரில் மேலப்பாளையம் ஓட்டலுக்கு திரும்பினார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள ஓட்டல் முன் வழிமறித்து அவரை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
ரத்த காயங்களுடன் விழுந்த காஜா ஷெரிப்பை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் டூவீலரில் தப்பினர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரித்து மர்ம நபர்களை தேடுகின்றனர். தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
