ADDED : ஜூன் 27, 2026 07:04 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து வீட்டின் முன் ஜூன் 19- இரவு மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார்.
அப்பகுதியில் இருந்த சி.சி.டிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பைச் சேர்ந்த செல்வகுமார் 24, என்பவரை கைது செய்தனர். அவர் காதலித்த பெண் தன்னுடன் பேச மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஏதாவது ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச வேண்டும் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சிறை ஊழியர் வீட்டிலும் குண்டு வீச்சு: இதற்கிடையே திருநெல்வேலி மேலமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சேர்மன் 43, மத்திய சிறையில் ஊழியராக பணிபுரிகிறார்.
இவரது வீட்டு காம்பவுண்டு சுவரிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
சி.சி.டிவி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் சேர்மன் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இருந்ததால், எதிர்தரப்பினர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடுகின்றனர்.
