/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; போதையில் ரகளை செய்து வெட்ட முயன்ற சிறுவர்கள்
/
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; போதையில் ரகளை செய்து வெட்ட முயன்ற சிறுவர்கள்
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; போதையில் ரகளை செய்து வெட்ட முயன்ற சிறுவர்கள்
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; போதையில் ரகளை செய்து வெட்ட முயன்ற சிறுவர்கள்
ADDED : ஜூலை 30, 2025 12:27 AM

திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே பாப்பாக்குடியில் மது போதையில் அரிவாள்களுடன் விரட்டி வெட்ட முயன்ற சிறுவர்கள் மீது போலீஸ் எஸ்.ஐ., நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சண்முகசுந்தரம் 18, காயமுற்றார். மற்றொருவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பாப்பாக்குடி அருகே உள்ள ரஸ்தாவூரைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் 18 வயதுக்குட்பட்ட அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து மதுபானம் அருந்தினர். அப்போது இருவர் சக்திகுமாரிடம், 'நீ ஏன் ஊரில் நடக்கும் சம்பவங்களை போலீசாரிடம் தெரிவிக்கிறாய். நீ தெரிவிப்பதால் போலீசார் வருகின்றனர்,' எனக்கூறி தகராறு செய்து அரிவாளால் வெட்டினர்.
காயமுற்ற சக்திகுமார் ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் ஊருக்குள் வந்து தெரிவித்தார். மேலும் போலீசாரிடமும் தெரிவித்தனர்.
எஸ்.ஐ., முருகன், ஏட்டு பாலசுப்பிரமணியன், பட்டாலியன் போலீஸ் ரஞ்சித் குமார் ஆகியோர் ரஸ்தாவூர் குளக்கரை சென்றனர். போலீசார் சிறுவர்களிடம் பேச்சு கொடுத்தனர். போதையில் இருந்த அவர்கள் போலீசாரை தாக்கினர். மேலும் மூவரையும் அரிவாளுடன் துரத்தினர். எஸ்.ஐ., உட்பட மூவரும் ஊருக்குள் தப்பி வந்தனர்.
நேற்றிரவு 10:50 மணிக்கு எஸ்.ஐ. முருகன் ரஸ்தாவூரில் கருணாநிதி என்பவர் வீட்டிற்குள் சென்று பதுங்கினார். ஏட்டு பாலசுப்பிரமணியன், பட்டாலியன் போலீஸ் ரஞ்சித் கருணாநிதி வீட்டுக்கு எதிர்புறமுள்ள முஸ்தபா வீட்டிற்குள் ஒளிந்து கொண்டனர். கையில் அரிவாள்களுடன் சென்ற சிறுவர்கள் கருணாநிதி வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். மேலும் வீட்டுக்குள் புகுந்து கருணாநிதி மனைவி, குடும்பத்தினரை வெட்டுவதாகவும் மிரட்டினர்.
அப்போது எஸ்.ஐ., முருகன், குடும்பத்தினரை காப்பாற்ற அரிவாளுடன் மிரட்டியவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சண்முகசுந்தரம் 18, இடது விலா பகுதி வழியாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வெளியேறியது.
காயமுற்ற சண்முகசுந்தரமும், மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பினர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். சண்முகசுந்தரத்தை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் பட்டாலியன் போலீஸ் ரஞ்சித் காலில் காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ., முருகனும் காயமுற்றார். அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சண்முகசுந்தரம் மீது 10 வழக்குகள் பாப்பாக்குடி பகுதியில் அடிக்கடி இரு தரப்பு மோதல்கள், பெட்ரோல் குண்டு வீச்சுகள் நடக்கின்றன. சமீபத்தில் ஒரு கோயில் கொடையில் தகராறில் ஈடுபட்டதுடன், ஒரு வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகள் வீசினர்.
தற்போது துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற சண்முகசுந்தரம் மீது கடந்த இரு ஆண்டுகளில் ஒரு கொலை, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல், வன்கொடுமை வழக்குகள் என எட்டு வழக்குகள் உள்ளன. நேற்றும் போலீசாரை தாக்கியது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த சக்தி குமாரை தாக்கியதற்காக வன்கொடுமை பிரிவு என இரு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. மற்றொரு சிறுவன் மீது நான்கு வழக்குகள் உள்ளன.
தொடரும் வன்முறை சம்பவங்கள் பாப்பாக்குடி, இடைகால், பள்ளக்கால், பொதுக்குடி பகுதிகளில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன் ஜாதி தகராறில் ஒரு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னணியில் மது, போதை மற்றும் கஞ்சா புழக்கம் உள்ளது.
7 மாதங்களில் 27 கொலைகள் திருநெல்வேலி நகர், புறநகர் பகுதியில் ஜனவரி முதல் ஜூலை வரை 27 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியூரில் நகைக்காக பெண் வேடமிட்டு மின்வாரிய ஊழியர் ருக்மணியை கொலை செய்து கொள்ளையடித்த சம்பவம், சொத்து பிரச்னையில் தந்தை கொலை, படிக்க வற்புறுத்திய தந்தை தலையில் கல்லை போட்டு கொலை, சரியாக சாப்பாடு தராத ஆத்திரத்தில் மகளை கொன்ற தந்தை, திருநெல்வேலியில் நேற்று முன்தினம் நடந்த ஆணவக் கொலை என 27 கொலைகள் நடந்துள்ளன.
ஜாதி மோதல்களும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடக்கின்றன.