/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலை வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
/
மாஞ்சோலை வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : பிப் 01, 2026 06:47 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணி முத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் எனும் பி.பி.டி.சி., நிறுவனம், தேயிலை தோட்ட எஸ்டேட்களை மூடியதை தொடர்ந்து, தொழிலாளர்கள் வேலை இழந்து, கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டனர். தங்களை, மலைப்பகுதியிலேயே வசிக்க அனுமதி வழங்க, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளை காலி செய்யுமாறு பி.பி.டி.சி., நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய நிலையில், தற்போது தொழிலாளர்களின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க, மதுரை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
தற்போது மின் வினியோகம் இல்லாததால், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் தங்களது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தியும், விறகில் தீ மூட்டி அதன் வெளிச்சத்தில் சமாளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். நீதிபதிகள் நேரில் வந்து விசாரித்தால் தான் எங்களுக்கான நீதி கிடைக்கும்' என்றனர். மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில், எஸ்டேட் தொழிலாளர்களுக்காக தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
கடந்தாண்டு டிசம்பரில், ஊத்து மற்றும் நாலுமுக்கு தபால் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில், நேற்று, மாஞ்சோலையில், 70 ஆண்டுகள் பழமையான தபால் அலுவலகமும் மூடப்பட்டது.

