UPDATED : நவ 01, 2026 04:48 PM
ADDED : நவ 01, 2026 04:44 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ரயில்வே ஊழியர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தச்சநல்லுார் புதுஅம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ் 38. இவர் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் கிரேடு- 3 டெக்னீசியனாக பணியாற்றினார். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
வேல்ராஜ், மதுரையில் நடந்த பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வில் பங்கேற்க காரில் புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பாததால் மனைவி துர்கா, அவரது அலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.
இதையடுத்து நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் அருகே கணவரை தேடிச் சென்றார். அப்போது ஸ்டேஷனின் மேற்கு பகுதியில், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பின் பின்புறம் வேல்ராஜின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காருக்குள் வேல்ராஜ் இறந்துகிடந்தார். உடலில் காயங்கள் எதுவும் இல்லை. தகவலறிந்த ஜங்ஷன் போலீசார், உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வேல்ராஜ் காரில் துாங்கியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.
